Sunday, November 18, 2018

வாமனன்


பிரகலாதனின் பேரன்
பேராண்மை கொண்ட வீரன்

மாவலி,
உலகம் அறியும் இவன் தோள்வலி
தேவரும் அடைந்தார் கிலி.
பூவுலகம், சொர்கம் எல்லாம் இவன் கையில்
தேவாதி தேவரும் இந்திரனும் இவன் ஆளுகையில்
பதவி போன இந்திரன் போன இடம் வைகுண்டம்
சயனித்திருந்த பெருமாளிடம் அடைந்தான் அவன் தஞ்சம்
'எடுப்பாய் இன்னொரு அவதாரம்
பறிப்பாய் பலியின் அஹங்காரம்
'பறிபோனதுவே என் அரியணை',
பலவாறு துதித்தான் பரமனை

அன்னை அதிதியிடம் முறையிட்டான் இந்திரன்
அவளும் தவமிருந்து பெற்றாள் பரம்பொருளை
பெற்றாள் மகனாகத் திரு அருளை
அதிதிக்குப் மகனாகப் பிறந்தான்
வாமனன்,
சேஷப் படுக்கை விட்டு வந்த நாரணன்
அனைவரும் அறிய ஒன்ணாப் பூரணன்
உருவத்தில் வாமனன்,
உடுத்துவது வெறும் கோமணம்
சிறிய மூர்த்தி, ஆயினும்
பெரிய கீர்த்தி

ஆங்கே
அனைத்துலகும் வென்று
அசுவமேதங்கள் இயற்றி
நூறாவது யாகத்திற்கு
வகை செய்தான் பலி
தேவர் உள்ளங்களில் மேலும் வலி
அவ்ன் அவுணன்
ஆயினும் அறவோன்
நூறாவது யாகத்திற்காக
பொன், பொருள், பூமி, ஆனை, பரி என
அளவில்லாமல் கொடுத்தான் வாரி
தானும் யாசகம் பெற புறப்பட்டான் உபேந்திரன்
உருவில் இவன் குள்ளம்
இவன் வடிவோ நெஞ்சை அள்ளும்
குள்ள உருவம், முப்புரி நூல்
தாழங்குடை, கமண்டலம்
பலியின் அரண்மனை வாயிலில்
வந்து நின்றது சூரிய மண்டலம்
வந்து நின்ற ஜோதி வடிவம் கண்டு
மக்கள் வியந்தனர்
அரக்கர் பயந்தனர்
வரவேற்று பாத்யம் அர்க்கியம் ஆசமனீயம் என
பரமனின் பாதங்கள் தழுவினான்
பலி தன் பாவங்களயும் கொஞ்சம் கழுவினான்

'வேண்டுவது கேளோய் ஐயனே
சுடர் போல் ஜொலிக்கும் பையனே'
பணிவோடு உரைததான் மாவலி
'என் காலால் மூன்றடி நிலம் வேண்டும்'
பவளச் செவ்வாய் திறந்து
பன்னக சயனன் இயம்பினான்
'குறு முனி போல் குள்ள உருவம்
தாங்கள் இருப்பதோ இளம் பருவம்
என்ன வேண்டுமோ தங்களுக்கு
இன்னும் கேளுங்கள் தருவேன்'
அசுர குரு சுக்கிரர்
அவுணர்க்கு என்றும் மித்திரர்
பகர்ந்தார் இவ்வாறு
'வந்தவன் குள்ளப் பிராமணன் அல்ல
உலகோர் போற்றும் நாரணன்
கொடுக்கும் வாக்கில் கவனம் வேண்டும் பலி
அன்றேல் நீ பூனையிடம் சிக்கிய எலி'
'பரம்பொருளே என்னிடம் யாசித்தால்
என்ன வேண்டுமோ தருவேன்
நான் என்னையும் சேர்த்துத் தருவேன்'
பெருமிதத்தில் ஆர்த்தான் பிரகலாதனின் பேரன்
தானம் கொடுப்பதிலும் அவன் வீரன்
மூன்றடி நிலம் தந்தேன் என்றே
தாரை வார்த்தான் அசுர மன்னன்

மூன்றடி உயரமே இருந்த
முகில் வண்ணன்
முப்புரி நூலன்
முதல்வன்
வளர்ந்தான், இன்னும் வளர்ந்தான்
குறள் போல் குறுகி இருந்தவன்
அதன் பொருள் போல் மிக விரிந்தான்
அவன் உருவத்தால் ஆதவன் மறைந்தான்
தானவர், மானவர் நடுங்கினர்
வானவர் மலர் மாரி பொழிந்தனர்
ஓர் அடியால் இவ்வுலகம் அளந்தான்.
இன்னோர் அடியால் விண்ணையும் அளந்தான்
விண்ணோர் அந்த அடி தழுவி பூசனை செய்தனர்
கங்கை நீரால் பாதம் கழுவினர்,
பாத பூசை செய்து தம் பாவம் கழுவினர்
மூன்றாவது அடி எங்கே வைப்பேன்
வினவினன் வாமனன்,
வாமனனோ.....
அல்ல அல்ல
விண்ணைத் தாண்டி வளர்ந்த
திரிவிக்கிரமன்.
'மூன்றாம் அடி வைக்க எங்கே நிலம்'?
அசுவமேதம் நூறு செய்த அரக்கனை
வினவினான் கருட வாகனன்
உரகணை விட்டு வந்த பெருமகன்
'ஈரடியால் இவ்வுலகம் விண்ணுலகம் அளந்தீர்
மூன்றாம் அடி என் முடிமேல் வைப்பீர்
மலரடி முடி மேல் வைத்து
என்னைக் கடைத்தேற்றுவீர்
வாழ்வுக் கடன் அகற்றுவீர்'
பலியின் தலை மேல் பாதம் வைத்து
பாதாளம் அனுப்பியது பரப்பிரும்மம்
ஆண்டுக்கொரு முறை அவன்
ஆண்ட நாடு காண
என்னை அனுமதியுங்கள்
வேண்டினான் பலி
அந்த நாள் திரு ஓணம்
ஆவணித் திங்கள்

ஓணம் நன்னாளில் மஹாபலி சக்ரவர்த்தியையும்
திரிவிக்கிரமப் பெருமானையும் நினைவில் கொள்வோம்